குரங்கணி தீ விபத்து – விசாரணை அறிக்கை தாக்கல்

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.   குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரிக்க பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது.

இதையடுத்து விசாரணையைத் தொடங்கிய அவர்,  விபத்து நடந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்திய அவர், காயமடைந்தவர்களிடமும், வனத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார் .  இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அதுல்ய மிஸ்ரா, குரங்கணி தீ விபத்து தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்தார்.

125 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தீ விபத்துக்கான காரணங்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த சந்திப்பின் போது, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.