காவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை மு.க.ஸ்டாலின் துவங்கினார்

        காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று தொடங்கினார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை திருச்சி முக்கொம்பில் இன்று தொடங்கினார் .இதனை முன்னிட்டு திருச்சி புறப்பட்ட ஸ்டாலின் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார்.

திருச்சி வந்தடைந்த ஸ்டாலினை தெற்கு மாவட்டச் செயலாளரும் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான நேரு தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எ.வ.வேலு, முன்னாள் எம்.எல்.ஏ-க்களான தலைமை செயற்குழு உறுப்பினருமான சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி உட்பட திரளானோர் வரவேற்றனர்.

 

         பச்சை துண்டுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ஸ்டாலின், திருச்சி சங்கம் ஹோட்டலில் ஓய்வெடுத்தார் மாலை 5-15 மணியளவில் முக்கொம்பில் கொடியேற்றத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் நடைப்பயணத்தைத் தொடங்கினார் .

தொடர்ந்து கம்பரம்பேட்டை, சத்திரம் பஸ்ஸ்டாண்ட், காந்தி மார்க்கெட், சர்க்கார் பாளையம், ஒட்டக்குடி, கீழ முல்லைக்குடி, புத்தாவரம், வேங்கூர் பூசத்துறை வழியாகக் கல்லணை அமைந்துள்ள தோகூரில் இன்றைய பேரணி முடிகிறது. தொடர்ந்து அங்கு இரவு நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகிறார்.

கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேச உள்ளார்கள். இந்தப் பயணம் 13-ம் தேதி கடலூரில் முடிவடைகிறது. வரும் 9 ஆம் தேதி மற்றொரு குழு அரியலூரில் இருந்து பயணத்தை தொடங்குகிறது.

முக்கொம்பில் தொடங்கிய காவிரி மீட்பு பயணத்தில் கி.வீரமணி பேசியதாவது தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்கும் வரலாற்று நடைப் பயணம் தொடங்கியுள்ளது மத்திய அரசிடம் உரிமையை தான் கேட்கிறோம் என்றார்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்பு பயணம் அரசியல் நோக்கத்துக்காக இல்லை காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான இறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது, தீர்ப்பினை கர்நாடக அரசு ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த பயணத்தின்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அஞ்சலட்டையில் கையெழுத்துபெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது