காற்று மாசுபாட்டால் குழந்தைகளுக்கு நேரும் பேராபத்து.!

அதிகரித்து வரும் காற்று மாசுப்பாட்டால், குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுவதாக ஐ.நா அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

காற்று மாசுபாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளதாவது, தெற்கு ஆசிய நாடுகளில் தான் ஏராளமான குழந்தைகள் காற்று மாசுபாடு மிகுந்த பகுதிகளில் வசித்து வருகின்றனர். ஒரு கோடியே 70 லட்சம் குழந்தைகள் இத்தகைய காற்று மாசுபாடு மிக்க பகுதிகளில் வசிக்கின்றனர். கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் 43 லட்சம் குழந்தைகள் நச்சு காற்றை சுவாசிக்கின்றன.

இந்த நச்சுகாற்றானது, குழந்தைகளின் நுரையீரலை மட்டும் அல்லாது, அவர்களின் மூளை வளர்ச்சியையும் சேதப்படுத்துவதால் அவர்களின் உடல்நலத்துடன் எதிர்காலமும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது.

இதை ஏற்படாமல் இருக்க, காற்று மாசு அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்த காற்று மாசு இருக்கும் போது, முகமூடி அணிந்து அழைத்து செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து மிக்க உணவுகள் அளித்தும், தடுப்பு ஊசி போட்டு கொண்டு அவர்களின் நோய் பாதிப்பிலிருந்து மீளும் வகையில், குழந்தைகளின் உடல்நலனை காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ. நா. அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.