கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி – திரளான பக்தர்கள் பங்கேற்பு

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பக்தர்களின் வெற்றி வேல், வீரவேல் கோஷங்களுக்கு இடையே தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில், 5-ம் நாளான இன்று தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு கால சந்தி பூஜை நடந்தது. 7 மணிக்கு சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. 11.30 மணிக்கு தாரகாசூரன் சம்ஹாரம் நடந்தது.
இதையொட்டி கோயிலிலிருந்து சுவாமி சார்பில் நாரதர் கந்தபுராணம், முருகாற்றுபடை பாடல்கள் பாடியபடி சூரபத்மனிடம் 3 முறை தூது செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தூது படலத்தில் சமரசம் ஏற்பாடாததை தொடர்ந்து தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் வெற்றி வேல், வீர வேல் என கோஷங்கள் எழுப்பினர். தாரகாசூர சம்ஹாரம் வேறு எந்த முருகன் கோயிலிலும் நடைபெறாது என்பது குறிப்பிடதக்கது. பின்னர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

6-ம் நாளான நாளை (13-ம் தேதி) மாலை 4 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உதய மார்த்தாண்ட அபிஷேகம், 6.30 மணிக்கு சுவாமி கழுகாசலமூர்த்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. காலை 11 மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை வழிபாடு நடக்கிறது. மாலை 3 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் போர்க்களம் செல்லுதல், 4 மணிக்கு கோயில் தெற்கு வாசல் முன்பு சூரசம்ஹாரம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மு.கார்த்தீஸ்வரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.