கலிங்கலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு விவசாயிகள் தவிப்பு

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நாரணபுரம் கிராமத்தில் உள்ள இலங்குளம் 144 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் நீரைப் பயன்படுத்தி 650 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் நடந்து வருகிறது. வாசுதேவநல்லூர், நாரணபுரம், ஏமன்பட்டி, கூடம்பட்டி, சங்கனாப்பேரி கீழப்புதூர் கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், கரும்பு, எலுமிச்சை, பருத்தி மற்றும் பயிறு வகைகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த 650 ஏக்கர் விளைநிலங்களில் 300 ஏக்கர் விளைநில விவசாயிகள் குளத்தின் தென்கரை மற்றும் கரை அடிவார பாதையை பயன்படுத்தி தங்களது விளை பொருள்களை வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். குளத்தின் கீழ்பகுதியில் உள்ள மீதமுள்ள 350 ஏக்கர் விளை நில விவசாயிகள் தங்களது விளைபொருட்களை, வாசுதேவநல்லூரில் இருந்து பனையூர் நோக்கி செல்லும் கலிங்கலாற்றை கடந்து செல்லக் கூடிய பாதையைப் பயன்படுத்தி வந்தனா்.

தற்போது கலிங்கலாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளது. நெல் அறுவடைக் காலம் என்பதால் அறுவடை இயந்திரம் செல்லுவதற்கோ, விளைபொருட்களை வெளியே கொண்டு செல்லுவதற்கோ வழியில்லாமல் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர்.

கலிங்கலாறின் குறுக்கே ரூ.1.40 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பிரிப்பு அணை கட்டும் பணியோடு, அணைப்பகுதியிலிருந்து மேற்கு நோக்கி 1 கி.மீ. தொலைவிற்கு ஆற்றின் தெற்குக் கரையை வாகனம் செல்லுகின்ற வகையில் பலப்படுத்திக் கட்ட வேண்டும் என விவசாயிகள் கருதுகின்றனர்.