கந்தசஷ்டி

கந்தசஷ்டி வைபவம் 08.11.2016 முதல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள முருகன் பக்தர்கள் வேலவனை, வேலாயுதனை பரவசமாய்ப் போற்றிப் பாராட்டி, வணங்கித் தொழும் காலகட்டம் இது. இத்தருணத்தில் முருகன் கை வேல் பற்றிய சிறப்புகளை அறிந்து இன்புறலாம்.

வேலாயுதம் தோன்றிய வரலாறு

தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்றது வேலாயுதம். அது சிவபெருமானைப் போலவே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. அத்தகைய ஒப்பற்ற சக்திமிக்க தனியாண்மை கொண்ட நெடுவேலாயுதம் தோன்றி, முருகன் கையில் வெற்றி வேலாயுதமாக நிலைபெற்ற வரலாற்றை அனேக புராணங்கள் சிறப்பாகக் குறித்துள்ளன. காசிபமுனிவருக்கும், அசுர குலத் தோன்றலாகிய மாயைக்கும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி ஆகியோர் பிறந்தனர். சூரபத்மனும் அவனது தம்பியரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டனர். தவத்தின் பயனாக, சூரபத்மன் சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும், 108 யுகங்கள்வரை ஆளும் வரத்தைப் பெற்றான். தம்பியரான தாரகனும் சிங்கமுகனும் வரங்களைப் பெற்றனர். அவன் தான் பெற்ற வரபலத்தால் எட்டுத் திக்கிலும் படை நடத்தி, எல்லோரையும் அடிமைப்படுத்தினான்.

அவனைக் கண்டு தேவர்கள் ஓடினர். அவர்கள் கடலில் மீனாகவும், காட்டில் பறவைகளாகவும் மறைந்து வாழ வேண்டியதாயிற்று. அவன் இந்திரனின் மகனான ஜயந்தனையும் அவனது தோழர்களையும் கிரெளஞ்ச மலையில் சிறை வைத்தான். ஒரு கட்டத்தில் அளவு கடந்து இனி தாங்க முடியாது என்ற நிலைமை உண்டாயிற்று. தேவர்கள் எல்லோரும் கூடிச் சிவபெருமானைச் சரணடைந்தனர். சிவபெருமான், அவர்களிடம், ‘‘அஞ்சாதீர்! அசுரர்களை அழித்து ஒழிக்கத்தக்க ஒருமகனைத் தருகிறேன். அவனால் உங்கள் கவலைகள் விரைவில் தீரும்,’’ என்று கூறித் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அதன் வெப்பம் தாங்காது அனைவரும் பயந்து அங்கிருந்து ஓடினர். அக்னிதேவன் அந்த ஆறு தீப்பொறிகளையும் எடுத்துச் சென்று கங்கையிடம் அளித்தான். அவள் அவற்றைத் தனது உற்பத்தித் தானமாகிய நாணற்காட்டில் இருந்த சரவணப் பொய்கையில் விட்டாள். அங்கு அவை ஆறும் அழகிய குழந்தைகளாக உருப்பெற்றன. சிவனும், பார்வதியும் அங்கு சென்றனர். பார்வதிதேவியார் அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர வாரி அணைத்தாள்.

அக்கணத்தில் அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றாகி, ஆறு திருமுகங்களும், பன்னிரண்டு தோள்களும், இரண்டு திருவடிகளும் கொண்ட அழகிய குமரனாகியது. உமையவள் அவனுக்குக் கந்தன் என்று பெயர் சூட்டினாள். கார்த்திகைப் பெண்களிடம் அவனை வளர்த்து வரச் சொன்னாள். கந்தனோடு நவவீரர்களும் தோன்றினர். கந்தன் நவவீரர்களுடன் சில காலம் விளையாடி மகிழ்ந்தான். பிரணவத்திற்குப் பொருள் உரைத்தும். நாரதர் செய்த வேள்வியில் தோன்றிய ஆட்டை வாகனமாக ஏற்றும், அவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று, முருகனைத் தங்களுக்குத் தலைவனாக அனுப்பிச் சூரனையும், அவனது கூட்டத்தாரையும் அழித்துத் தமக்கு இன்பம் வழங்கி வாழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சிவபெருமான் முருகனை அழைத்து, ‘‘குமாரனே! நீ விரைந்து சென்று சூரனாதியரை வென்று தேவர்களுக்கு வாழ்வு தருக’’ என்று ஆணை மொழிந்தார். பிறகு சிவபெருமான் தனது அம்சமான பதினோரு ருத்திரர்களின் அம்சத்திலிருந்து பதினோரு ஆயுதங்களை அளித்தார். பிறகு உமாதேவியிடம், ‘‘முருகனுக்கு ஆயுதமொன்றை வழங்குக’’ என்றார்.

அம்பிகை ஒப்பற்ற ஆற்றல் கொண்டதும், விரைந்து செல்வதும், பகைவரை எளிதில் அழித்து வெற்றியை அடைந்து மீள்வதுமான வலிய வேலாயுதத்தைப் படைத்து அவரிடம் அளித்தாள். இதுவே வேல் பிறந்த கதையாகும். சிவசக்தியரின் அம்சமாகவே வேல் தோன்றியது. கந்தபுராணம் உற்பத்தி காண்டம் – விடைபெறு படலத்தில் சிவபெருமான், முருகப்பெருமானுக்கு ஆயுதங்களை அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அது வருமாறு : சூரபத்மன் முதலான கொடிய அரக்கர்களின் சேனையை வெல்லப் போர்க்கோலம் பூண்டு நின்ற முருகப்பெருமானிடம் சிவபெருமான் பதினோரு உருத்திரர்களையும் முறையே, 1. தோமரம், 2. கொடி, 3. வாள், 4. குலிசம், 5. அம்பு, 6. அங்குசம், 7. மணி, 8. தாமரை, 9. தண்டம், 10. வில், 11. மழு எனும் பதினோரு ஆயுதங்களாக்கி அளித்தார். பின்பு ஐந்து பூதங்களையும் ஒரு சேர அழிக்கக்கூடியதும் எவர் மேல் விடுத்தாலும், அவருடைய வலிமைகளையும் வரங்களையும் கெடுத்து உயிரைப் போக்கக்கூடியதும் அனைத்துப் படைக்கலங்களுக்கும் தலைமையானதும் ஆகிய வேலாயுதத்தைப் படைத்து முருகக்கடவுளிடம் கொடுத்தார். இதனை,

‘‘ஆயுதற் பின்னர் ஏவில் மூதண்டத்து
ஐம்பெரும்பூதமும் அடுவது
ஏய பல்லுயிரும் ஒருதலை முடிப்பது
ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம்
மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி
மண்ணியில் உண்பது எப்படைக்கும்
நாயகமாவது, ஒரு தனிச் சுடர்வேல்
நல்கியே மதலை கைக் கொடுத்தான்.’’

– என வரும் கந்தபுராணச் செய்யுளால் அறியலாம். இவ்வாறு சிவபெருமான் முருகனுக்கு வேல் கொடுத்த வரலாற்றைக் கூறுவது புராண மரபு எனப்படும். ஆனால், நடைமுறையில் அன்னை பராசக்தியே முருகப்பெருமானுக்கு வேலாயுதத்தை வழங்கினாள் என்று கூறப்படுகிறது. அதையொட்டியே ஆலயங்களில் அம்பிகையின் சந்நதியில் முருகன் வேல் வாங்கும் ஐதீக நாடகம் நடந்து வருகிறது. முருகனுக்குப் பராசக்தி வேல் தந்ததாகக் கூறும் மரபு ஐதீக மரபு எனப்படும். உமாதேவியார் முருகனை அழைத்து, ‘வாழ்க வாழ்க’ என்று சொல்லி, வேல் அளித்ததைப் போற்றி திருச்செந்தூர் திருப்புகழில் ஸ்ரீஅருணகிரிநாத சுவாமிகள், ‘எம் புதல்வா வாழி! வாழி! எனும்படி வீரானவேல் தர’ என்று குறிப்பிடுகின்றார். இப்படி முருகன் வேலாயுதம் பெற்றது பற்றி இரண்டு கருத்துகள் இருப்பினும் இரண்டையும் ஒன்று சேர்த்து முருகனுக்கு சிவபெருமான் வேலாயுதத்தைத் தர, பராசக்தியான உமாதேவியார் அதற்கு அளப்பரிய சக்திகளைக் கொடுத்தாள் என்று ஆன்றோர் கூறுவர்.

(இதற்கு எடுத்துக்காட்டாகத் திருக்கோலக்காவில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பொன் தாளம் தர அதற்குப் பெருமாட்டி ஓசைதந்து ஓசை கொடுத்த நாயகி என்று பெயர் பெற்று விளங்குவதைக் கூறுவர்.) கதைகள் பல இருப்பினும் தாய் தந்தையார் அளிக்க வேலாயுதத்தை முருகப் பெருமான் வேலைப் பெற்றார் என்பதும், பகைவரை அழித்து உலகிற்கு நன்மை பயக்கச் சிவசக்தியர் அருளாக வேல் பிறந்தது என்பதும் எண்ணி மகிழத்தக்கதாகும்.

அன்னை சக்தியிடம் முருகன் வேல்வாங்கும் ஐதீக நாடகம்

தேவர்களுக்குப் பெருந்துன்பத்தை விளைத்த சூரபத்மனையும், அவனது அசுரர் கூட்டத்தையும் அழிக்கச் சிவபெருமான் முருகப்பெருமானைத் தோற்றுவித்து அவருக்கு உருத்திரர்களின் அம்சமான பதினோரு படைக்கலங்களையும் அளித்தார். பின்னர் பராசக்தி தனது சக்தி அம்சத்திலிருந்து வேலாயுதத்தைத் தோற்றுவித்து முருகப்பெருமானுக்கு அளித்தார். அன்னை பராசக்தியிடம் முருகன் வேலாயுதத்தைப் பெற்ற நிகழ்வை முருகன் ஆலயங்களில் ஐதீக விழாவாக நடத்துகின்றனர். சூரசம்ஹார விழாவின் அங்கமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சக்தியிடம் வேல் வாங்கும் விழா என்பது பெயர். பெரிய சிவாலயங்களிலும் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களிலும் சில அம்மன் கோயில்களிலும் மகா கந்தர் சஷ்டியினை ஒட்டி நடத்தப்படும் பெருவிழா சூரசம்ஹார பெருவிழாவாகும். இது பெரும்பாலும் தீபாவளிக்கு மறுநாளான பிரதமையில் தொடங்கி சஷ்டிகளில் நிறைவு பெறும். இதனைக் கந்தர் சஷ்டி விரதம் எனவும் அழைப்பர்.

பிரதமையில் தொடங்கி முருகனுக்கு இந்த ஆறு நாட்களிலும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும். சில ஆலயங்களில் முருகனுக்கு எதிரேயுள்ள கொடிமரத்தில் கொடியேற்றி, காலையும் மாலையும் முருகன் வீதி உலா நடத்தப்படுகிறது. இவ்விழாவின்போது முருகன் சூரபத்மனையும் அவனது அசுரக் கூட்டங்களையும் அழிக்கும் ஐதீக நாடகம் நடத்தப்படும். இந்த நாடகத்தில் முருகன் நவவீரர், நாரதர் ஆகியோரின் வேடம் தரித்து ஒரு கூட்டமும் சூரபத்மன், தாரகன், சிங்கமுகன், அஜமுகி, பானுகோபன், அவனது சேனாதிபதிகள் மற்றோர் கூட்டமும் ஆக இரண்டு பிரிவினராக இருந்து நாடகத்தை நடத்துகின்றனர். இந்த இரு சாரருமே காப்பு கட்டிக் கொண்டு விரதமிருப்பர். சூரசம்ஹார நாளான சஷ்டியன்று பிற்பகலில் முருகன் நவவீரர்கள் நாரதர் வேடமிட்டவர்கள் கூட்டமாக அம்பிகை சந்நதியின் முன்பு நிற்பர். அலங்கரிக்கப்பட்ட முருகன் திருவுருவத்தை எடுத்து வந்து அம்பிகை சந்நதிக்கு நேர் எதிரில் நிறுத்துவர்.

முதலில், நாரதர் வேடம் தரித்தவர் காசிப முனிவனுக்கு மாயையிடம் சூரபத்மனும் தம்பி தங்கையரும் அசுரக் கூட்டங்களும் பிறப்பது; அவர்கள் தவம்; 1008 அண்டங்களை 108 யுகங்கள் ஆண்டது; அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் இழைத்தது; தேவர்கள் துன்பம் தாள மாட்டாமல் சிவபெருமானைச் சரண் அடைந்தது; சிவபெருமான் முருகனைப் படைத்து அளித்தது; முருகன் பல்வேறு திருவிளையாடல்கள் புரிந்தது; தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் முருகனை அழைத்து சூரபத்மனை அழித்து வர ஆணை தந்தது; முருகன் அதை ஏற்றுக் கொண்டு அன்னையின் அனுமதி வேண்டி அவள் வாயிலில் நிற்பது வரையிலான கதையைச் சுருக்கமாக பாடலாகவோ, விருத்தமாகவோ, உரை நடையாகவோ கூறுவார். பின்னர் அம்பிகையைத் துதித்துப் பாடல்கள் பாடப்படும். அம்பிகை ஆசி வழங்குவதுடன் வேல் தருவதாகக் கூறும் பாடல்கள் பாடப்படும். அதன் பின்னர் சர்வ வாத்தியங்களும் முழங்க அம்பிகைக்கும் முருகனுக்கும் ஏக காலத்தில் தீபாராதனை நடக்கும். பின்னர் அர்ச்சகர் அம்பிகையின் கையில் வைக்கப்பட்டிருக்கும் அலங்கரிக்கப்பட்ட வேலை எடுத்து வந்து முருகன் திருக்கரத்தில் வைப்பார்.
ஊர்ப் பெரியவர்கள், ஊர்ப் பொதுவில் வழிபடப்படும் கனத்த இரும்பு வேலாயுதத்தை எடுத்து வந்து முருகன் வேடமிட்டவரிடம் அளிப்பார். உடனிருக்கும் நவவீரர்கள் வேடம் புனைந்தவர்கள் வில்லம்பு அல்லது நெடிய பட்டாக்கத்தியைத் தாங்குவர். அவர்கள் அம்பிகையை வணங்கி, சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்திற்கு வீதிஉலாவாகச் செல்வர். முருகனைக் குதிரை அல்லது ஆட்டுக்கடா வாகனத்தில் அமர்த்தித் தம்முடன் எடுத்துச் செல்வர். இதுவே பராசக்தியிடம் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி, ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் நடக்கும். எண்ணற்ற தலங்களில் இத்தகைய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றாலும், அவற்றில் தலையானதாக இருப்பது சிக்கலில் நடைபெறுவதுதான். ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்பது பழமொழி. சிக்கலில் வேல் வாங்கும்போது முருகன் திருமேனியில் வியர்ப்பது இன்றும் நடக்கும் அதிசயம். முருகனுடன் தோன்றிய வீரவாகுதேவரின் வம்சத்தில் வந்தவர்கள் என்று புராணம் போற்றும் செங்குந்தர்களான கைக்கோளர்கள் பெரும்பாலான ஊர்களில் சூரசம்ஹார நாடகத்தினை நடத்தி வருகின்றனர். சில இடங்களில் செட்டியார்கள் நடத்துகின்றனர்.

சிவபெருமானிடமிருந்து முருகன் வேல் வாங்குதல் பொதுவாக சூரசம்ஹார விழாவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியே அனைத்து ஆலயங்களிலும் நடத்தப்படுகிறது. அபூர்வமாக சில தலங்களில் சிவபெருமானிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சூரசம்ஹாரத்தின்போது முருகன் சபைக்கு எழுந்தருள்கின்றார். அவரோடு அன்பர்களும், ஐதீக நாடகத்தில் பங்கு பெறும் முருகன், நவவீரர்கள், நாரதர் முதலியோரும் சபைக்கு வருகின்றனர். நடராஜரின் இடப்பக்கத்தில் இருக்கும் சிவகாமி அம்பிகையின் கரத்தில் வேல் வைக்கப்பட்டு தீபாராதனை ஆனதும் அது முருகன் திருக்கரத்தில் வைக்கப் படுகிறது. பின்னர் முருகன் அன்பர்களும் ஐதீக நாடக நடிகர்களும் தொடர சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகின்றார். முருகன் முத்துக்குமாரசுவாமி என்னும் பெயரில் கோலாகலமாக வீற்றிருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் சூரசம்ஹார விழாவில் முருகன், கருவறைக்கு முன்பாக எழுந்தருளி மூலவரான வைத்தியநாத சுவாமியிடமிருந்தே வேலாயுதத்தைப் பெறுகிறார். இவை மகா கந்தபுராணத்தில் சிவபெருமான் முருகனுக்கு வேலாயுதத்தை அளித்ததை அடியொற்றி நடத்தப்படுவதாகும்.

பழனிவேல்

பழனிவேல் என்பது பழனி முருகனிடம் இருக்கும் வேலாகும். பழனி முருகன் தண்டாயுதபாணியாக இருந்தபோதிலும், அவருக்குத் தங்கத்தாலான தங்க வேலும் உயர்ந்த கற்கள் இழைத்த ரத்தின வேலும் சாத்தப்படுகின்றன. பழனி மலையடிவாரத்தில் பாரவேல் மண்டபம் என்னும் மடம் இருக்கிறது. காவடி எடுத்து வருபவர்கள் தம்முடன் எடுத்து வரும் வேலை இங்கு வைத்துப் பூசிப்பது வழக்கம். பழனி ஆண்டவர் சூரசம்ஹார நாளில் அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. பழனி மலைக் கோயிலில் இருக்கும் மலைக்கொழுந்து நாயகிக்கு வெள்ளாடை அணிவித்து, வெண்மலர்களால் அலங்கரித்து, வெள்ளை சாத்துபடி செய்து, அவள் கரத்தில் வேலாயுதத்தை வைக்கின்றனர். பின்னர் அவள் சந்நதிக்கு சின்னக்குமரர் என்னும் தண்டாயுதபாணி எழுந்தருளி வேல் வாங்கும் ஐதீகக் காட்சி நடைபெறுகிறது. பின்னர், தங்கக் குதிரையில் சின்னக்குமரரும் ஆட்டுக்கடாவில் வீரபாகுவும், மற்றைய எட்டு வீரர்கள் கேடயங்களுடனும் மலையிலிருந்து இறங்கி கீழே வருகின்றனர். கீழே நான்கு திக்கிலும் சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது. பின்னர் வேலுடன் சின்னக் குமரர் மலைக்கு எழுந்தருளுகின்றார்.

வேல் மலையிலிருந்து இறங்கி வந்து சூரசம்ஹாரம் நடத்தி, மீண்டும் மலைமேல் வரும்வரையில் மாலையில் பூஜை நடைபெறுவதில்லை. சின்னக்குமரர் வேல் ஏந்தி நவவீரர் புடைசூழ சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. காஞ்சியில் குமரன் வேல் வாங்கும் விழா கல்வியே கரையிலாக் கச்சி என்று புகழப்படும் காஞ்சிபுரத்திலுள்ள முருகன் ஆலயங்களில் முதன்மை பெற்ற ஆலயமாக இருப்பது குமர கோட்டம் ஆகும். திருப்புகழ் பாடல் பெற்ற திவ்ய திருப்பதி இது. கந்தபுராணம் அரங்கேற்றிய வேளையில் தடை ஏற்பட்டபோது முருகன் புலவராக வந்து தடையை விலக்கி, அரங்கேற உதவியதும் ஆகிய பெருமைகளை உடைய இத்தலத்தில் சூரசம்ஹார விழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. குமரகோட்டத்து அன்பர்கள் சூரசம்ஹார விழாவிற்கென வைத்திருக்கும் வேலை எடுத்துக் கொண்டு காமாட்சி அம்மன் ஆலயம் சென்று, அங்குள்ள உலகாணி தீர்த்தத்தில் அதற்கு அபிஷேகம், அலங்காரம் செய்து காமாட்சியம்மன் திருக்கரத்தில் வைத்து சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை செய்து எடுத்து வந்து விழா காண்கின்றனர்.

விழாவில் மூலவருக்கு வைரக்கற்கள் இழைத்த சக்திவேலும், உற்சவரான ஆறுமுகனுக்கு இலை வேலும் சாத்தப்படுகிறது. ஆதிநாளில் குமரகோட்டம் முருகன் காமாட்சியம்பிகை சந்நதிக்கு எழுந்தருளி வேல் வாங்கும் வழக்கம் இருந்ததாகவும் காலஓட்டத்தில் அது மாறி, இப்போதைய நடைமுறை வந்திருப்பதாகவும் அன்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அலங்காரக் காட்சிகளில் முருகன் வேல் வாங்குதல் நவராத்திரியில் அனைத்து ஆலயங்களிலும் அம்பிகையை அன்னபூரணி, காத்தியாயனி, காயத்ரி, கெளரி, வைஷ்ணவி, மகாலட்சுமி என்று பல்வேறு கோலங்களில் அலங்கரித்து சிறப்பு வழிபாடுகளுடன் மகாதீபாராதனை செய்து வழிபடுகின்றனர். இப்படி செய்யப்படும் அலங்காரங்களில் அன்னை பராசக்தி, சக்திவேல் தர, முருகன் அதை வாங்கிக் கொள்ளும் காட்சியும் இடம் பெறுகிறது. குறிப்பாக, தென் மாவட்டக் கோயில்களில் இந்த அலங்காரம் தனிச் சிறப்புடன் போற்றப்படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடை பெறும் நவராத்திரி விழா இரண்டாம் நாளில் அன்னை முருகனுக்கு வேல் வழங்கும் காட்சி அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் மீனாட்சி இரண்டு கரங்களிலும் வேலைப் பிடித்துக் கொடுக்கும் கோலத்திலும், முருகன் அதை வாங்கும் கோலத்திலும் காட்சி தருகின்றனர். கயிலையில் அளித்தது போலவே, மதுரையில் மீண்டும் முருகனுக்கு வேலாயுதம் அளித்ததை வரலாறு கூறுகிறது. அதையொட்டி இந்தத் தலத்திற்கே உரிய சிறப்பு அலங்காரமாகவும் இது போற்றப்படுகிறது. சிவாலயங்களில் மட்டுமின்றி மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்மன் ஆலயங்களிலும் நடைபெறும் நவராத்திரி விழாவிலும் வேல்
வாங்கும் அலங்காரம் செய்யப்படுகிறது.

வேலன் ஏந்தும் விதவிதமான வேல்கள்

முருகப்பெருமானின் கரத்தில் விளங்கும் வேலாயுதம் வடிவாலும், வனப்பாலும் அது செய்யப்பட்ட பொருளாலும் புராணச் சிறப்பாலும் அது நிகழ்த்திய வீரச் செயலாலும் பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது. இவ்வகையில் அதன் அமைப்பை ஒட்டி சக்திவேல், வஜ்ரவேல், இலைவேல், நெடுவேல் என்ற பெயர்களைப் பெற்றுள்ளது. சக்திவேல் சக்தியின் வடிவாகவும், வஜ்ரவேல் வைரம் பதித்ததாகவும் இருக்கின்றன. சில வேல்களின் இலைப் பகுதியில் மந்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. இப்படி அமைக்கப்படும் மந்திரச் சக்கரங்கள், மந்திர வடிவங்களையொட்டி அது மந்திரவேல் எனப்படுகிறது. உயர்ந்த ரத்தினங்கள் இழைக்கப்பட்டு செய்யப்பட்ட வேல் நவரத்தினவேல் என்றும், மாணிக்கம் பதித்த வேல் மாணிக்கவேல் என்றும், வைரக் கற்களைக் கொண்டு இழைத்த வேல் வைரவேல் என்றும், தங்கத்தால் செய்யப்பட்ட வேல் தங்கவேல் என்றும், முத்துக்கள் பதிக்கப்பட்ட வேல் முத்துவேல் என்றும் அழைக்கப்படுகின்றன.

மேலும், அன்பர்கள்பால் அருள்புரியம் உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பதால் குணரத்தின வேல் என்றும், மணிரத்தின வேல் என்றும், தங்கமாக எண்ணத்தில் திளைப்பதால் தங்கவேல் என்றும், எதிரிகளைச் சங்கரித்து அழிப்பதால் சத்ரு சங்கார வேல் என்றும் அழைக்கப்படுகிறது. அவரவர் தகுதிக்கும், வளமைக்கும், செல்வச் செழுமைக்கும் ஏற்ப, வேல்களைப் பொன்னாலும், நவமணிகள் இழைத்தும் செய்து வழிபடுகின்றனர். என்றாலும், வீரர்கள் ஏந்தும் வேல்கள் யாவும் உறுதியான எஃகினால் செய்யப்படுவதாகும். அது கூர்மைமிக்கதாகவும் உறுதிமிக்கதாகவும் வீசி எறிவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

சக்தி வேல்

வேலின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சக்தி வேலாயுதம் ஆகும். சக்தி என்னும் ஆயுதத்தின் வடிவம் என்பது மூன்று முக்கோணங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்தது போன்றதாகும். முருகன் நாற்கரங்களோடு திகழ்கையில், சக்தியாயுதத்தைத் தனது இடது மேற்கரத்தில் ஏந்துகிறார். சக்திவேல் என்பது சக்தி ஆயுதத்தை நீண்ட தண்டின் முனையில் பொருத்தி அமைக்கப்பட்டதாகும். வேலாயுதத்தைப் போலவே சக்தி வேலாயுதமும் தனிச் சிறப்புடன் போற்றப்படு கிறது. அன்பர்கள் சக்திவேல் என்ற பெயரைச் சூட்டிக் கொள்கின்றனர். சக்தி ஆயுதம் அக்னிக்குரிய அடையாளமாகும். அதையொட்டிேய அக்னியில் உதித்தவரான முருகன் சக்திவேலை ஏந்துகின்றார்.

தணிகை முருகன் சக்தி ஆயுதத்தை ஏந்தியிருப்பதால், ஞானசக்திரர், சக்திரர் என்றே அழைக்கப்படுகின்றார். சிக்கல் சிங்காரேவலர், சுவாமிமலை சுவாமிநாதன், வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமி போன்ற முருகன் வடிவங்களுக்கு, உயர்ந்த கல்லிழைத்த சக்தி வேலாயுதம் சாத்தப்படுகிறது. முருகன் மேற்கரங்களில் வஜ்ரம், சக்தி ஆகிய இரண்டையும் தாங்கியுள்ளார் என்றாலும் அவற்றுடன் சக்திவேலையும் தாங்குகின்றார். வேலாயுதத்தை முருகப்பெருமானாகவே கொண்டாடுவதால் அதைப் படைக்கலமாக அமைக்காமல் அதனையொத்த சக்தி ஆயுதத்தைப் படைக்கல வழிபாட்டிற்கு வைத்துள்ளனர் என்பது பலரது கருத்தாகும்.

முருகன் ஆலயங்களில் சக்தி ஆயுதமே

அஸ்திரதேவர் என்னும் படைக்கல தெய்வமாகப் போற்றப்படுகிறது. பெருந்திருவிழாவின் போது முருகனின் வீதியுலாவிற்கு முன்பாக சக்தி ஆயுதமே எடுத்துச் செல்லப்படுகிறது. தீர்த்தவாரி விழாக்களிலும் சக்தி ஆயுதத்தையே நீராட்டி வழிபடுகின்றனர்.

சக்ர வேல்

இந்திய வழிபாட்டில் மந்திர பீஜங்களை வட்டம், சதுரம், முக்கோணம் ஆகியவை இணைந்த கட்டங்களில் எழுதி வழிபடும் சக்ர வழிபாடு ஓர் அங்கமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு தேவதைக்கும் அதன் அருளாற்றலை வெளிப் படுத்தும் வகையில் அமைந்த சக்கரங்கள் பல உள்ளன. இவ்வகையில் வேலாயுதத்தைப் போற்றும் வகையில் அமைந்த பல சக்கரங்கள் வழிபாட்டில் இருக்கின்றன. இவற்றில் சில சக்கரங்களை வேலின் இலை போன்ற பகுதியில் கீறி அமைத்துள்ளனர். சிலவற்றைச் சதுரமான தகட்டில் எழுதி உருட்டி வேலின் தண்டுப் பகுதியில் உள்ள இடைவெளியில் செலுத்தி மூடி விடுவதும் உண்டு. பொதுவான நிலையில் வேலின் மையத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனுள் அறுகோணத்தை இட்டு அதன் மையத்தில் ஓம் எனும் பிரணவத்தையும், சுற்றியுள்ள ஆறு முக்கோணங்களில் ச, ர, வ, ண, ப, வ என்னும் ஆறு எழுத்துகளையும் எழுதி வழிபடுகின்றனர்.

மேலும், சடாட்சர சக்கரம், சத்ரு சம்ஹார சக்கரம், சக்தி நிலைய சக்கரம் போன்ற சிறப்பு நிலையில் அமைந்த சக்கரங்களையும் வேல் வழிபாட்டில் காண்கிறோம்.
இதில் குறிப்பிடத்தக்கது அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் ஆலயத்திலுள்ள ஆறுமுகவேலவரின் கையிலுள்ள வேலாயுதமாகும். இங்குள்ள ஆறுமுகநாத சுவாமி திருக்கரத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட வேலாயுதம் உள்ளது. இதில் பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் அருளாணைப்படி பழனிசாமி முதலியார் என்பவர் இந்தச் சக்கர வேலாயுதத்தை அமைத்தார் என்று கூறப்படுகிறது. அவர் அமைத்துள்ள இந்தச் சக்கரம் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. இதனை, ‘‘சத்ருசங்கார வேல் சக்கரம்’’ என்றும் கூறுகின்றனர். மேலும், அருணகிரிநாதசுவாமிகள் அருளிய வேல் வகுப்பை வேல்மாறல் எனும் யந்திரமாக அமைத்தும் வழிபடுகின்றனர்.

வேல் வகுப்பான பதினாறு அடிகளைத் திரும்பத் திரும்ப மாற்றி மண்டலித்து வரும்படி அறுபத்துநான்கு அடிகளாக விரித்துப் பாராயணம் செய்யும் முறையை, திருப்புகழ் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் உண்டாக்கினார்கள். இந்த அமைப்பு வேல்மாறல் என்று அழைக்கப்படுகிறது. இந்த வழிபாட்டில் சதுரத்தின் நடுவே அமைந்த வட்டத்தின் நடுவில் ஆறு வேல்களின் வடிவில் எழுதப்பட்ட இதழ்களின் வேல் வகுப்பை எழுதிச் சக்கரமாக அமைத்து வழிபடுகின்றனர். இதில் மூன்று வேல்கள் இலை வேல்களாகவும், மூன்று வேல்களைச் சக்தி வேல்களாகவும் மாறி மாறி அமைத்துள்ளனர். இது வள்ளிமலை சுவாமிகளின் பக்தர்களால் மிகவும் சிறப்புடன் இப்போதும் போற்றப்படுகிறது. இது வேல் மாறல் யந்திரம் ஆகும். இன்னும் அனேக சக்கரங்கள் வேல் வழிபாட்டுடன் இணைந்திருப்பதைப் பல நூல்களில் காணலாம்.

உத்தண்ட வேல்

நீண்ட ஒரு தடியை தண்டம் என்பர். தீயவரைத் தண்டித்து உயர்ந்தவரைக் காப்பதால், வேலுக்கும் தண்டம் என்பது பெயராயிற்று. வேலைச் சிறப்பித்துக் காட்டும் வகையில் உத்தண்ட வேலன் என்றும் அழைக்கப்படுகிறார். பழனி முருகனுக்குத் தண்டாயுதபாணி என்ற பெயர் வழங்குகிறது. சக்திவேல், வஜ்ரவேல் போன்று உத்தண்ட வேல் என்பது வேலின் வடிவங்களில் ஒன்றாகும். நீண்ட தண்டாயுதமே உத்தண்ட வேல் எனப்படுகிறது.

முத்துவேல்

முத்துகள் பதித்த வேல், முத்துவேல். முத்து என்பது உயர்ந்தவற்றை, தரமானவற்றை, அழகானவற்றைக் குறித்தும் சொல்லாகும். முத்துவேல் என்பது மனதைக் கவரும் அழகு படைத்ததும், உயர்ந்ததும், ஆற்றல் மிக்கதுமான வேல் என்ற பொருளைத் தருகிறது. மக்கள் முத்துவேல் என்ற பெயரைச் சூடிக் கொள்கின்றனர்.

மந்திரவேல்

முருகன் ஏந்தும் வேல்களில் மந்திரவேலும் ஒன்றாகும். கல்லாடம் எனும் நூல் வேலாயுதத்தை, ‘உள்ளத்திருளும் இடைபுகுந்து இருள் துடைத்த மந்திரத் திருவேல்’ என்று போற்றுகிறது. மந்திரம் என்பதற்கு நீங்காது உடனிருந்து காப்பது என்பது பொருளாகும். தன்னை வணங்கும் அன்பர்களை விட்டு நீங்காது காத்து அருள்புரிவதால் வேலுக்கு மந்திரவேல் என்பது பெயராயிற்று. ‘வேலும் மயிலும் துணை’ என்பது மகாமந்திரம். கந்தர்சஷ்டி கவசத்தில் ‘மந்திர வடிவேல் வருக வருக’ என்று பாலதேவராயர் வேலை அழைப்பதைக் காண்கிறோம். சைவ சமயம் கூறும் மகா மந்திரம் ஐந்தெழுத்தாகிய நமசிவாய என்பதாகும். இதனைச் ‘சிவமஞ்செழுத்து’ எனவும் குறிப்பர். அருணகிரிநாதர் வேலாயுதத்தையே ‘சிவமஞ்செழுத்து’ என்கிறார். சிதம்பரத்தில் அருளிச் செய்துள்ள திருப்புகழில் ‘வெங்களத்தில் அவுணன் தெரிந்து மயங்க சிவமஞ்செழுத்தை முந்தவிடுவோனே’ என்று அவர் பாடுவதைக் காண்கிறோம்.

மணிமந்திர நூலான கந்தர் அனுபூதியின் ஐம்பத்தோரு பாடல்களில் இருபத்தைந்து பாடல் களில் அருணகிரிநாதர் வேலைப் புகழ்கின்றார். அஷ்டசக்தி வேலாயுதங்கள் அந்தகாசுரனை வதைக்கச் சிவபெருமானால் உண்டாக்கப்பட்ட யுக்த சக்திகள் அஷ்டமாதர்கள் ஆவர் – பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி, யோகேஸ்வரி. அவனை வதைத்தபின் அவர்கள் சிவனைத் தொழுது மேன்மை பெற்றனர். இம்மாதர்கள் போர்க்களத்தில் வேலேந்திப் போரிடுகின்றனர். பிராம்மி பிரம்மவேலையும், மகேஸ்வரி மகாசக்தி வேலையும், கௌமாரி பத்ர வேலையும், வைஷ்ணவி பத்ம வேலையும், வாராகி வஜ்ர வேலையும், இந்திராணி இந்திரநீல வேலையும், சாமுண்டி சம்ஹார வேலையும், யோகேஸ்வரி உக்ர வேலையும் ஏந்திப் போரிடுகின்றனர். இந்த எட்டு வேல்களையும் அஷ்டவேலாயுதங்கள் என்றழைக்கின்றனர்.

ரத்தினவேல்

ரத்தினவேல் என்பதற்கு இரத்தினம் போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்ட வேல் என்றும், நவரத்தினங்கள் பதித்த வேல் என்னும் பொருள் கூறுகின்றனர். புகழ் பெற்ற ஆலயங்களில் நவரத்தினக் கற்கள் இழைத்த விலைமதிப்பு மிக்க வேலாயுதம் முருகனுக்கு அணிவிக்கப்படுகிறது. நவரத்தினங்களால் ஆன வேலாயுதங்களை முருகனின் தம்பியரான நவவீரர்கள் ஏந்துகின்றனர். இவர்கள் அன்னை பராசக்தியின் பிரதி பிம்பத்திலிருந்து தோன்றிய நவரத்தின மங்கையராகிய 1) மாணிக்கவல்லி 2) முத்துவல்லி 3) புஷ்பராகவல்லி 4) கோமேதகவல்லி 5) வைடூர்யவல்லி 6) வைரவல்லி 7) மரகத வல்லி, 8) பவள வல்லி 9) நீலவல்லி ஆகிய ஒன்பதின்மரின் குமாரர்களாவர். முருகன் தன் தாயிடமிருந்து வேலாயுதத்தைப் பெற்றதைப் போலவே இவர்களும் தத்தம் தாயிடமிருந்து வேலாயுதங்களைப் பெற்றனர். அவையே நவரத்தினவேல்களாகும் – மாணிக்கவேல், முத்துவேல், புஷ்பராகவேல், கோமேதகவேல், வைடூர்யவேல், வைரவேல், மரகதவேல், பவளவேல், நீலவேல். இந்த ஒன்பதின்மரும் தமக்குரிய வேலுடன் முருகனோடு விளையாடி மகிழ்வதை பழைய கால ஓவியங்களில் கண்டுகளிக்கலாம். மக்கள் முத்துவேல், மரகதேவல், மாணிக்கவேல், மற்றும் பொதுவாக ரத்தினவேல் என்று பெயர்களைச் சூடுகின்றனர்.

வஜ்ர வேல்

வஜ்ரம் என்பது இந்திரனின் ஆயுதம். இது இரண்டு சூலங்கள் தம்முன் இணைந்தது போல் இருப்பது. இதனைக் குலிசம் என்றும் அழைப்பர். மூன்று முக்கோணங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்தது போன்ற வடிவம் கொண்டதே சக்தி ஆயுதமாகும். இது பெண் சக்தியாகும். புராணங்களின்படி இந்திரன் சக்தி ஆயுதம் கொண்டவனில்லை. அவன் வஜ்ஜிரம் எனப்படும் குலிசாயுதன், அவனைக் குலிசாயுதன் என்றும், வைரப்படையான் என்றும் இலக்கியங்கள் போற்றுகின்றன. வஜ்ரம் என்பதற்கு அறுக்க முடியாதது, துளைக்க முடியாத, உடைக்க முடியாத அதாவது, எதனாலும் சேதப்படுத்த முடியாதது. எளிதில் வெல்ல முடியாததும், அழிக்க முடியாததுமான உறுதிமிக்க ஆயுதமாக மேல் இருப்பதால் அது வஜ்ரவேல் எனப்பட்டது. மக்கள் வஜ்ரவேல் என்ற பெயரைச் சூடியுள்னர்.
வஜ்ரவேல் என்பது உறுதி, திண்மை, திறமையின் காரணமாக வேலுக்கு அமைந்த பெயர், வடிவத்தால் வந்ததல்ல. புராணங்கள் முருகன் ஏந்தும் வேலாயுதத்தை அதன் மேன்மை காரணமாக வஜ்ரவேல் என்று அழைக்கின்றன. மக்கள் உயர்ந்த ஜாதிக் கல்லான வைரங்கள் பதித்த தங்கவேலையே வஜ்ரவேல் என்றழைக்கின்றனர். அனேக ஆலயங்களில் வைரக்கற்கள் பதித்த வேல்கள் இருக்கின்றன. நடைமுறையில் சக்தி ஆயுதத்தைத் தலைப்பில் கொண்ட சக்திவேலைப் போல வஜ்ராயுதத்தை முகப்பில் கொண்ட வஜ்ராயுத வேல்கள் இல்லை.

தங்கவேல்

தங்கவேல் என்பதற்கு இருவிதமான பொருளைக் கூறுகின்றனர். முதற்பொருள், அது உயர்ந்த உலோகமாகிய தங்கத்தால் செய்தது; இரண்டாவது, அன்பர்களின் வாழ்வில் செல்வ நலன்கள், வளம், மேன்மை போன்றவற்றை எந்நாளும் தங்கி இருக்கும்படி அருள்புரிவது. ஆலயங்களில் தங்கத்தால் ஆன வேலாயுதத்தைச் செய்து முருகனுக்குச் சாத்தியுள்னர். அதில் மேலும் அழகூட்ட உயர்ந்த ஜாதி வண்ணக் கற்களைப் பொருத்தியுள்ளனர். வேல் வழிபாடு மனதில் மகிழ்ச்சியைத் தங்க வைக்கும் வழிபாடாக இருக்கிறது.

வெள்ளி வேல்

வெள்ளி தூய்மையான உலோகம். அதனால் அதைக் கொண்டு பூஜைப் பொருட்களைச் செய்கின்றனர். பெரும்பாலான ஆலயங்களில் வெள்ளியால் செய்த வேலாயுதமும் சேவற்கொடியும் முருகனுக்குச் சாத்தப்படுகின்றன. அன்பர்கள் வெள்ளி வேலை காணிக்கையாகச் செலுத்தி மகிழ்கின்றனர். அனேக அன்பர்கள் இல்லங்களில் வெள்ளியால் செய்யப்பட்ட வேலாயுதம் வழிபாட்டில் இருந்து வருகிறது.

எஃகு வேல்

தங்கம், வெள்ளி உலோகங்கள் மதிப்புமிக்கவையாக இருந்தபோதிலும், அவை ஆயுதங்களாகச் செய்து பயன்படுத்தத் தகுதியற்றவை. அவை கவர்ச்சியும், மதிப்பும் மிக்க அணிகலன்களைச் செய்ய மட்டுமே பயனாகும். இரும்பு எளிய உலோகமாக இருந்தாலும், வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உருவாக்குவதற்குத் தேவையான கருவிகளைச் செய்வதற்கு ஏற்ற உலோகமாக இருக்கிறது. இரும்பு அதனோடு சேர்ந்துள்ள கரியின் தன்மைக்கேற்ப பலவகைப்படும். அதில் தேனிரும்பு, காரிரும்பு, எஃகு என பல வகைகள் உள்ளன. எஃகு இரும்பு உறுதியும், எளிதில் வளையாததும், கூர் மழுங்காததும், துருப்பிடிக்காததுமான தன்மைகளைக் கொண்டதாகும். அதனால் போர்த்தளவாடங்களை எஃகினால் மட்டுமே செய்தனர். குறிப்பாக, விரைந்து சென்று இலக்கைத் தாக்கும் வேலாயுதங்களை எஃகால் செய்தனர். அதனால் வேலுக்கே எஃகம் என்பது பெயராயிற்று. ஆதியில் திருப்படைக் கோயில் எனப்படும் வேல் கோயில்களில் அமைத்து வழிபடப்பட்ட வேல்கள் யாவும் எஃகினால் செய்யப்பட்டவையே. வசதியும் வாய்ப்பும் பெருகப் பெருக வெள்ளி, தங்க வேல்கள் வழக்கத்திற்கு வந்துவிட்டன.