கணவனின் குறையை தாயிடம் கூறியதால் மனைவியை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர்..

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம்,கங்காதர நெல்லூர் மண்டலம், மோதரங்கனபள்ளி பகுதியை சேர்ந்த குமாரசாமியின் மகன் ராஜேஷ் (24). இவர் குப்பம் மண்டலத்தில் அரசு ஆசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கும், சின்னதாமரை குண்டாவை சேர்ந்த பாபுவின் மகள் சைலஜா (20) என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. மணமகள் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, தனக்கு ஆண்மை குறைபாடு உள்ளதென மணமகன் ராஜேஷ் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு சைலஜா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜேஷிடம் சைலஜா கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தை யாரிடமும் வெளியே கூறக்கூடாது என ராஜேஷ் கூறியுள்ளார். ஆனால் தனது வாழ்க்கை பாழாகி விட்டதாக வெளியில் சென்று தனது தாயிடம் சைலஜா கூறியுள்ளார். இதனை கேட்ட மணமகளின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பின் முதலிரவு அறைக்கு வந்த தனது மனைவியை, ‘ஏன் இந்த விஷயத்தை வெளியே கூறினாய்?’ என கேட்டு ராஜேஷ் கண்மூடித்தனமாக அடித்துள்ளார். முதலிரவு அறையில் இருந்து மகளின் அலறலைக் கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், அறைக் கதவை தட்டினர். ஆனால் கதவை ராஜேஷ் திறக்காமல் மனைவியை ரத்தம் கொட்டும் அளவிற்கு கடுமையாக தாக்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் அறையின் கதவை உடைத்து கொண்டு மணமகளின் பெற்றோரும், உறவினரும் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு முகம், மற்றும் உடலில் காயங்களுடன் சைலஜா மயக்க நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக சித்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சைலஜாவின் பெற்றோர் கங்காதர நெல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் ராஜேஷையும் அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு தனக்கு ஆண்மை குறைபாடு இருப்பதாக திருமணத்திற்கு முன்பே தெரியும் என்று கூறி தனது குற்றத்தை ராஜேஷ் ஒப்புக்கொண்டார். ராஜேஷையும் அவரது தந்தை குமாரசாமியையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று சைலஜா மேல் சிகிச்சைக்காக திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை மகளிர் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர். இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மாநில கல்வி துறை ராஜேஷை இடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.