ஓ.பி.எஸ்சிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த மர்மங்களுக்கு விடை காண்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த விசாரணை கமி‌ஷன் விசாரணையை நடத்தி வருகிறது.

அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந் தேதியுடன் இந்த விசாரணை கமி‌ஷனின் பதவி காலம் நிறைவு பெற உள்ளது. இது வரை 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் முக்கியமாக கருதப்படுபவர் சசிகலா தான். எனவே சசிகலா சொல்லும் தகவல்கள் இந்த விவகாரத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

சசிகலாவிடம் விசாரணை நடத்திய பிறகு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடமும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி கமி‌ஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.