எதன் அடிப்படையில் மோகன் சி லாரஸ் மீது வழக்கு நீதிபதி கேள்வி

தூத்துக்குடியைச் சேர்ந்த மதபோதகர் மோகன் சி லாரஸ். இந்து கடவுள்களையும், கோவில்களையும் விமர்சித்ததாக வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.

இதை வைத்து பாஜக பிரமுகர் முருகேசன் கோயமுத்தூர் கருத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல் நிலையத்திலும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், பொள்ளாச்சி காவல் நிலையத்திலும் மோகன் சி லாரஸ்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த புகார்கள் அடிப்படையில் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, மோகன் சி லாரஸ் சார்பில், அடிப்படை முகாந்திரம் இல்லாமல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதால் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது மோகன் சி லாரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மனுதாரர் 18.03.2014 அன்று சென்னையில் பேசினார். ஆனால், போலீசார் தரப்பில் பதிவு செய்யப்பட்ட புகாரில், 23.09.2018 அன்று பேசியதாக கூறப்பட்டுள்ளது. உண்மையில் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது எங்கு எடுக்கப்பட்டது என்ற அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை. பொதுவான குற்றச்சாட்டை மட்டும் வைத்துக் கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்’ என்று வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதன் அடிப்படையில் மோகன் சி லாரஸ் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்தனர் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக நாகர்கோவில் கோட்டார் போலீசார் விசாரித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.