எடியூரப்பா பேரம்… சிறப்பு குழு விசாரணை : குமாரசாமி உத்தரவு

கர்நாடக சட்டசபையில் கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண்கவுடாவிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

அந்த உரையாடலில் இருப்பது தனது குரல் இல்லை என்று மறுத்த எடியூரப்பா, முதல்-மந்திரி குமாரசாமி தனது தோல்விகளை மறைக்க போலி ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார் எனவும் சாடியிருந்தார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார்.

பா.ஜனதாவினரும், குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது எனவும் கூறி வந்தனர். அந்த ஆடியோவை குரல் பரிசோதனைக்காக அனுப்ப உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல் மந்திரி குமாரசாமி உத்தரவிட வேண்டும். 15 நாட்களுக்குள் சட்டசபையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்து முதல் மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.