எடப்பாடி ஸ்டெர்லைடை மூடுவதில் அக்கறை காட்டவில்லை … கனிமொழி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது
வேதாந்தா நிறுவனம், அதன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினை திறந்து நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மே 22-ந்தேதி 13 பேர் கொல்லப்பட்ட பிறகு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. வேதாந்தா இந்த தடையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார்.  வேதாந்தா போன்ற பெரிய நிறுவனத்தை எதிர்த்து வழக்காடுகையில் முதல் நாளே போதுமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இதற்கான ஆலோசனை, வழக்கு 10.30-க்கு தொடங்க இருந்த நிலையில் அரைமணி நேரம் முன்னதாக 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. ஏன் தாமதம் என்றால் சி.எஸ். வைத்தியநாதன், தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்தார். கலைஞருக்கு இடம் தரக் கூடாது என்பதில் முனைப்பு காட்டிய எடப்பாடி பழனிசாமி அந்த அக்கறையை ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் காட்டியிருந்தால் இத்தோல்வி நிகழ்ந்திருக்காது. எடப்பாடி பழனிசாமி வரலாறு காணாத வகையில் தமிழகத்தின் நிர்வாகத்தின் தகுதியை குலைத்துக் கொண்டிருக்கிறார் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.