இன்றைய தியானம் 06-03-2018

“அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.” – நீதிமொழிகள் 16:18

தனது வாழ்நாட்களின் ஆரம்பகட்டத்தில் நன்கு வாழ்ந்து, பின்நாட்களில் கஷ்டம் அனுபவிப்பது என்பது வேதனையான காரியமாகும். உசியா ராஜாவின் வரலாறும் இப்படிப்பட்டதுதான். இவர் அரசனாகும்போது 16 வயது துடிப்புள்ள வாலிபன். இருப்பினும் தன் இஷ்டப்படியல்ல,

கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தார். அவர் கர்த்தரைத் தேடி, கற்பனைகளின்படி நடந்த நாட்களில் தேவன் உசியாவின் காரியங்களை வாய்க்கச்செய்தார். அவர் கீர்த்தி பெருகி மிகவும் பெலன் கொண்டார். அவரது புகழ் சுற்று வட்டார நாடுகளில் எல்லாம் பரவியது. அவரது இராஜ்யமும் இராணுவமும் பலப்பட்டபோது தனக்கு கேடுண்டாகும் மட்டும் மனம் மேட்டிமையானது.

அழிவுக்கு முன்னாது அகந்தை. விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமையல்லவா? ஆம், அவரது உள்ளம் அகந்தை கொண்டது. கர்த்தருடைய கட்டளையை மீறி ஆசாரியர்கள் மட்டுமே செல்லக்கூடிய தூப பீடத்தருகில் தூபம் காட்டும்படி நுழைந்தார். தன்னை உயர்த்தின தேவனை கனம் பண்ணவில்லை,

தேவகாரியத்தில் அவருக்கு ஆலோசனை கொடுத்தவர்களையும் மதிக்கவில்லை. “தன்னைப் பற்றித்தான் நல்லவர், வல்லவர் என்று நாடே புகழுகிறதே, இதைச் செய்யவும் நான் தகுதியானவன்தான்” என்ற எண்ணம் அவருக்குள் வந்தது. ஆகவே கர்த்தருடைய வார்த்தைகளை அசட்டை பண்ணி ஆலயத்திற்குள் வந்தார். விளைவு கர்த்தர் அவரை அடித்தார். அதனால் தன் மரணநாள் மட்டும் குஷ்டரோகியாக தனித்துவிடப்பட்டார்.

பிரியமானவர்களே! ஆசீர்வாதமாயிருக்கும் நம் ஆரம்பம், முடிவுவரை ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டுமானால் நம் இருதயம் தாழ்மைப்பட வேண்டும். நம்முடைய கீர்த்தி பெருகும்போதும், நம்மை பலர் புகழ்ந்து பேசும்போதும், நம்மை அறியாமலேயே “நான் நல்லவன்” என்ற சுயநீதி நம் சிந்தனையை நிரப்பிவிடும் அபாயம் உண்டு. காலப்போக்கில் இதுவே மனமேட்டிமை அடையச் செய்து நம்மை அழிவுக்கு நேராய் அழைத்துச்சென்றுவிடும். வேதம் சொல்லுகிறது,

“தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லை” என்று. ஆம் நம் சுயநீதியெல்லாம் அழுக்கான கந்தை, நம்முடைய அறிவும் குறைவுள்ளது, நம்முடைய மாம்சத்திலும் நன்மை வாசமாயிருப்பதில்லையே! ஆகவே தேவனுடைய கிருபையினாலே நான் நீதிமானாக்கப்படுகிறேன் என்ற சிந்தை நம்மை நிரப்பியிருக்குமானால், நம்முடைய வாழ்வு இறுதிவரை பாதுகாப்பாய் ஆசீர்வாதமாய் இருக்கும்.
– Mrs.கீதா ரிச்சர்டு