இன்று விராலிமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி…. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்…

உலக சாதனை முயற்சியாக விராலிமலையில் இன்று நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டுப் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில 2 ஆயிரம் காளைகள், 500 வீரர்கள் பங்கேற்கும் போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தொடங்கி வைக்கிறார்.

போட்டியைக் காண 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மைதானத்துக்கு வெளியே ஜல்லிக்கட்டை பார்வையிட 4 இடங்களில் பெரிய அளவில் எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு பார்வையாளர்கள் சுமார் 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த 3 காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கும் கார், இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.

இதுதவிர சைக்கிள் மற்றும் பிரிட்ஜ், டிவி, மிக்ஸி, தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில் போன்ற பொருட்களும் பரிசாக வழங்கப்பட உள்ளன.

விழாவையொட்டி 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.