இன்று உலக சமூக நீதி – தாய்மொழி நாள்…! முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

உலக சமூக நீதி தினம்

⚖ ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20ஆம் தேதி உலக சமூக நீதி தினம் கொண்டாடப்படுகிறது.

⚖ உலகம் முழுவதும் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே மிகப்பெரிய இடைவெளி அதிகமாகிக்கொண்டே வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் கண்ணியமான வேலைகளை அனைவருக்கும் வழங்கி மனித வளத்தை மேம்படுத்த வேண்டும்.

⚖ ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நியாயங்களை கேட்டு அவர்களுக்கு சமூக நீதி கிடைத்திட வேண்டும் என்கிற நோக்கில் இத்தினம் 2007ஆம் ஆண்டில் ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டது.

 

“உலகத் தாய்மொழி நாள்” தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

மக்கள் தங்கள் தாய் மொழிகளை போற்றி வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் யுனெஸ்கோ நிறுவனம் பிப்ரவரி திங்கள் 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.

“தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகளுக்கேற்ப, அமுதம் போன்ற இனிமையும், இலக்கியச் செழுமையும், வலுவான இலக்கணக் கட்டமைப்பும் தன்னகத்தே கொண்டு, தென்னக மொழிகளின் தாயாகவும், உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த முதன் மொழியாகவும் விளங்கிடும் நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனைப் பேணிக் காத்திடும் வகையிலும், தமிழ் அமைப்புகள், சங்கங்களை ஊக்கப்படுத்திட “தமிழ்த்தாய் விருது”, தமிழறிஞர்களுக்குக் கபிலர், கம்பர், உ.வே.சா., சொல்லின்செல்வர், ஜி.யு. போப், உமறுப்புலவர், இளங்கோவடிகள் ஆகியோரின் பெயர்களில் விருதுகள், கணினித் தமிழ் வளர்ச்சிக்காக “முதலமைச்சர் கணினித் தமிழ் விருது”, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்திட “அம்மா இலக்கிய விருது”, ஆண்டுதோறும்

32 தமிழறிஞர்களுக்குத் “தமிழ்ச்செம்மல் விருது”, தரமான பிறமொழிப்படைப்புகளைத் தமிழில் மொழி பெயர்ப்பவர்களுக்குச் “சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது” போன்ற விருதுகளை வழங்கித் தமிழறிஞர்களைக் கவுரவித்தது.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.2500 உதவித்தொகை, மருத்துவப்படி, கட்டணமில்லாப் பேருந்துப் பயணச் சலுகை வழங்குவது, உலகப் பொதுமறையான திருக்குறளின் குறட்பாக்களை ஒப்புவிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்குவது, சிறந்த தமிழ் நூல் வெளியிடும் நூலாசிரியர்களுக்கு நிதியுதவி வழங்குவது, மதுரை, உலகத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் பல்வகைத் தமிழ்ப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வது போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தி வருகிறது.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியாரின் விருப்பத்திற்கேற்ப, சீன, அரபு மொழிகளில் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் பாடல்களை மொழிபெயர்ப்புச் செய்தும், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்கியும் உள்ளது.

மொழி என்பது ஒரு நாட்டின் பண்பாடும், அடையாளமும் ஆகும். இந்த உலகத் தாய்மொழி நாளில், தமிழர் பண்பாட்டையும், அடையாளத்தையும் காத்து வளர்த்திட, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றி வளர்த்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்