இந்தியா – பாக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ரகசிய ஆலோசனை..

இந்தியா, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தாய்லாந்து நாட்டில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நாசர்கான் ஜனுஜா ஆகியோர் ரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர் .

இந்த சந்திப்பு கடந்த 27-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடந்ததாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தனது பெயரை வெளியிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நல்லவிதமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அஜித் தோவலின் பேச்சு நட்புடனும், நேர் மறையாகவும் இருந்தது. இந்த சந்திப்பு, இரு நாட்டு தூதரக அளவில் நின்று போன சில நிகழ்வுகளை மீண்டும் தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆனால் இந்த சந்திப்பு குறித்து இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாகவோ, அதிகாரப்பூர்வம் இல்லாமலோ யாரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் ஒரு மூன்றாவது நாட்டில் சந்தித்து பேசுவது இது முதல்முறை அல்ல. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும், தங்கள் வெளியுறவு செயலாளர்களுடன் சேர்ந்து பாங்காக்கில் சந்தித்து பேசினார்கள். அந்த சந்திப்புக்கு பின்னரும் இரு நாடுகளும் அதனை வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.