ஆளில்லா விமான போட்டி: தல-யிடம் ஆசி பெற்ற மாணவர்கள்

பிரியாணி சமைப்பது, புகைப் படங்கள் எடுப்பது, ரேஸ் பைக் மற்றும் கார் ஓட்டுவது என பல விஷயங்களில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டுள்ள நடிகர் அஜித். அண்ணா பல்கலை கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராகவும் கடந்த மே மாதம் முதல் செயல்பட்டு வருகிறார்

அண்ணா பல்கலை கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில், உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்கிற உலக சாதனையை அஜித் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா டீம் உருவாக்கி சாதனை படைத்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாஹாணத்தில் உள்ள டால்பியில் மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன.

ரத்த மாதிரியை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட போட்டி. இதில் தக்‌ஷா குழு வடிவமைத்திருந்த விமானத்திற்கும் ஆஸ்திரேலியாவின் மோனாஹ் யூ.ஏ.எஸ் என்ற ஆளில்லா விமானத்திற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது.

இந்தப் போட்டியில் மோனாஹ் யூ.ஏ.எஸ் 116.55 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், 115.70 புள்ளிகள் பெற்ற தக்‌ஷா டீம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது அஜித் ஆலோசகராக இருக்கும் தக்‌ஷா குழு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதால், அவருக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பாராட்டு தெரிவித்துள்ளார்

இந்த அணிக்கு சிறப்பு ஆலோசகராக இருக்கும் நடிகர் அஜித்குமார் போட்டி நடைபெறும் போது ஆஸ்ரேலியா செல்லவில்லை, இதனையடுத்து போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள் அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.