ஆணையத்தை எதிர்த்து போராட வேண்டிய நிலை…. கே.எஸ். அழகிரி

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சசரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெற முடியாத அளவில் மக்கள் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த எதிர்ப்பை எப்படியாவது சரி கட்டுவதற்கு அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க. திரை மறைவு தந்திரங்களை செய்து வருகிறது. அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்தால் படு குழியில் விழ நேரிடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள முதலமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்க பேரம் பேசி வருகிறார்கள். தமிழகத்தில் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக – குறிப்பாக நரேந்திர மோடிக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்ந்து நடத்தாமல் தள்ளி வைப்பதற்கு அ.இ.அ.தி.மு.க. தலைமை பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

கடந்த 15 மாதங்களாக சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாமல் அந்த தொகுதிகளில் மக்கள் குறைகளை கேட்க எவரும் நாதியில்லாத நிலை இருந்து வருகிறது. இந்த அவல நிலையில் இருந்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைந்து நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.

அரசமைப்புச் சட்டப்படி, ஜனநாயக முறைப்படி 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்.

இதில் அ.தி.மு.க. தலைமையின் வற்புறுத்தலின் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசின் நிர்ப்பந்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து போகுமேயானால் அதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அணி திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படுமென எச்சரிக்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது