ஆசிரியர் கொலை: ஓராண்டுக்கு பின் 5 பேர் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சிவகுமார் (34). முதுநிலை பட்டதாரி ஆசிரியர். வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட இவர், கடந்த 4 ஆண்டுகளாக 11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், 2018 ஜனவரி மாதம் பள்ளிக்குச் சென்ற சிவகுமார், வீடு திரும்பவில்லை இதையடுத்து, அவரது தந்தை சண்முகம் அளித்த புகாரின்பேரில் சிவகுமார் காணாமல் போனதாக வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த புது ஏரி எனும் குளத்தில் மறுநாள் காலை சிவகுமார் சடலமாக மிதந்தது தெரிய வந்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற வேட்டைக்காரனிருப்பு போலீஸார் சடலத்தை மீட்டனர். ஆசிரியரின் கழுத்து, இடது பக்க காது உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்து வந்த நிலையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில்  அகிலன், கார்த்திக், அடைக்கலராஜ், ரகுபதி மற்றும் ஐயப்பன் ஆகிய 5 பேரை போலீசார் ஓராண்டுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.