அறந்தாங்கி வீரர் திருநாவுக்கரசர் பிறந்த தினமின்று..

சு. திருநாவுக்கரசர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார்.

ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இளம் அமைச்சராக இடம் பெற்று எம்.ஜி. ஆரின் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் திருநாவுக்கரசர். திறமையான அமைச்சராக அறியப்பட்ட திருநாவுக்கரசருக்குப் பலமுகங்கள். அரசியல்வாதியாக, திரைப்பட விநியோகஸ்தராக, நடிகராகவும் கூட அசத்தியவர் திருநாவுக்கரசர்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்து ஜெயலலிதா தலைமையில் தனி அணி உருவானபோது ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றவர் திருநாவுக்கரசர். ஜெயலலிதா ஆதரவு எம்.எல்.ஏக்களை ஆம்னி பஸ்சில் ஏற்றி ஊர் ஊராக இவரும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் அழைத்துச் சென்றது வரலாறு.

ஜெயலலிதாவின் நட்பு வட்டாரத்தில் முக்கிய இடத்தில் இருந்த திருநாவுக்கரசர் பின்னர் படிப்படியாக அதிலிருந்து விலக்கப்பட்டார். ஒரு கட்டத்தி்ல் ஓரம் கட்டப்பட்டு கட்சியை விட்டும் நீக்கப்பட்டார். பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கி நடத்தி வந்தார். பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்- அதை யாருமே அப்போது எதிர்பார்க்கவில்லை.

ஆனால் சேர்ந்த வேகத்தி்ல் மீண்டும் அதிலிருந்து வெளியேறி தனிக் கட்சி கண்டார். பிறகு அதையும் கலைத்து விட்டு 2002ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைவதற்கு முன்பு தனது பெயரை திருநாவுக்கரசர் என்று மாற்றிக் கொண்டார். பாஜகவில் இணைந்த அவர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இணை அமைச்சராக இடம் பெற்றார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர்,கடந்த ஆண்டில் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவிவகித்தார் .அசிங்கம் பிடித்த அரசியல் பாணியைக் கையாளாத வெகு சில அரிய அரசியல்வாதிகளில் திருநாவுக்கரசரும் ஒருவர்