அடுத்தடுத்து பூகம்பமாய் வங்கி மோசடிகள் …

வங்கியில் ரூ.824 கோடி கடன் பெற்று கனிஷ்க் தங்க நகை நிறுவனம் மோசடி செய்துள்ளது. 14 வங்கிகளில் கனிஷ்க் நகை கடை நிறுவனர் புபேஷ்குமார் ஜெயின் இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் லாபத்தை அதிகரித்து கடன் வாங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த மோசடி குறித்து சிபிஐக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடிதம் எழுதியுள்ளது.

சென்னை வடக்கு உஸ்மான் சாயில் உள்ள பிரஷாந்த் டவர்ஸில் கனிஷ்க் வங்கி இயங்கி வருகிறது. போலி ஆவணங்கள் மூலம் லாபத்தை அதிகரித்து கடன் வாங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சிண்டிகேட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆந்திர வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகளை மோசடி செய்து ரூ. 824 கோடி கடன் பெற்றுள்ளார்.

பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, அவரது உறவினர் மெகல் சோக்சி போன்றோர் வங்கிகளில் கடன் வாங்கி, பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன. இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளும் நடந்து வருகின்றன. அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேர்ந்த கனிஷ்க் தங்க நகை நிறுவனம் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

மோசடி நடந்தது எப்படி?

தங்க நகை இருப்பை அதிகமாக காட்டி வங்கிகளில் பல கோடி கடன் பெற்றதாக புகார் எழுந்தது. போலியாக ஆண்டு அறிக்கை தயாரித்து அதிக லாபம் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். தங்க நகை இருப்பையும் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் அதிகரித்து காண்பித்துள்ளனர். ஸ்டேட் வங்கி கணக்கை அடிப்படையாக வைத்து 13 வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்.

வரி ஏய்ப்பில் கைதானவர் புபேஷ்

வங்கி மோசடியில் ஈடுபட்ட நகை கடை நிறுவனர் புபேஷ் ஏற்கனவே வரி ஏய்ப்பில் கைதானவர். ரூ.20 கோடி கலால் வரி செலுத்தாததால் கடந்த செப்டம்பரில் புபேஷ்கமார் கைது செய்யப்பட்டார்.